கோவை:நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நல்லா பாக்குறேன் என்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு இன்று சென்னை புறப்படும் முதலமைச்சர், கோவை விமான நிலையம் வந்தடைந்து சென்னை புறப்படுகிறார். இதற்காக ஈரோட்டில் இருந்து சாலை மார்க்கமாக கோவை வந்த முதலமைச்சர் கோவை சுங்கம் பகுதியில் கடந்த 10ம் தேதியன்று, மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இலத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் இரா.மோகன், சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விற்கு பிறகு வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது." என்று முதல்வர் கூறினார்.
ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு குறித்தான கேள்விக்கு, "ராகுல் காந்தி அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார்." என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.