சென்னை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7வது பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கும் பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையையும் செய்ய தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறகணிப்பு:பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்புத் திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் தமிழகத்திற்கென என்னென்ன திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அது எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை:அதுமட்டுமின்றி, மத்திய அரசின் சிந்தனையில் கூட நாம் இல்லை. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதிநிலை அறிக்கை என்பது ஒரு நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை, அநீதி மட்டுமே உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாரபட்சமும், ஏமாற்றமும் தான் இருக்கிறது.
தமிழக மக்களை பாஜக மதிக்கிறதா? தமிழகம் இரண்டு பேரிடர்களைச் சந்தித்துள்ளது. ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டோம். இதுவரை ரூ.276 கோடி தான் கொடுத்துள்ளனர். அது சட்டப்படி வரவேண்டிய தொகை தான். பேரிடர் பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் பார்வையிட்டுச் சென்றனர். தமிழக மக்களை பாஜக மதிக்கிறதா என்பது என்னுடைய கேள்வி என்றார்.