சென்னை:சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு நாணயத்தை வெளியிட, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கியவரை சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது.
'நா-நயம்' மிக்க தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம். இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் கருணாநிதி.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஒமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
திமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி திறந்து வைத்தார். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இன்று கருணாநிதியின் நாணயத்தை நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட வருகை தந்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானது தான். 80 ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் இயங்கி, அதில் அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த கருணாநிதிக்கு இந்தியாவே வந்து சிறப்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கருணாநிதி நிறைவடைந்த நாள் முதல், நாள்தோறும் அவர் புகழைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவரைப் போற்றும் விதமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
கடந்த ஆக.15ஆம் தேதியன்று, நாட்டின் 78வது விடுதலை நாளை நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அந்த உரிமையை பெற்றுத் தந்தவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே..
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு