சென்னை:தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீதா ஹரிஷ் தாகூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் சரவணவேல் ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.