சென்னை:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பணம் வினியோகம் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பரிசுப் பொருட்களும் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குத் தகவல் அளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 88.12 கோடி ரூபாயும், 4.53 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கையில் ரொக்கமாக வைத்திருந்தால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி வரை பறிமுதல் செய்யப்படும். அதேபோல், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.