சென்னை:உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்து அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்றைய தினம் நவம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் 248 வாக்குகள் பெற்று ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலையிலிருந்தார். இந்தநிலையில், பெரும்பான்மையான 270 இடங்களை விட கூடுதலாக பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க:நான் தான் அமெரிக்க அதிபர்; உற்சாகத்தில் டிரம்ப் - எலக்டோரல் காலேஜ் இவரை எப்படி தேர்ந்தெடுத்தது?
இட்லியில் கமலா ஹாரிஸ் உருவம்:இந்த நிலையில் கமலா ஹாரிசை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், சென்னை கொடுங்கையூரில் சங்க தலைவர் இட்லி இனியவன் தலைமையில் 50 கிலோவில் இட்லியைத் தயார் செய்துள்ளனர். அதில் கமலா ஹாரிஸின் உருவ படத்தை வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.
உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண்மணி:இது குறித்து சங்க தலைவர் இட்லி இனியவன் கூறுகையில்," தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் வெற்றி அடைவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சமையல் கலை 50 கிலோ எடையுள்ள இட்லியை தயார் செய்து அதில் கமலா ஹாரீஸ் உருவத்தை வடிவமைத்தோம்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார் என்றால் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடலாம் என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அவர் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இருந்தாலும் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பெண்மணி, அவருக்காக இந்த இட்லியை வடிமைவைத்து எங்களை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளோம்" என தெரிவித்தார்.