சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் 86-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி பவன் முன்பு அமைந்திருக்கும் வாழப்பாடி ராமமூர்த்தியின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:
பரந்தூர், ஏகனாபுரம் ஆகியவை என்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வருகின்றன. அங்கு பலமுறை சென்று நான் பார்த்திருக்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அந்த மக்களுக்கு எந்தவித அச்சமும் இல்லாமல் அந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்துகிறோம் என்று நாடாளுமன்றத்தில் பாஜகவின் அமைச்சர் சொன்ன பிறகு இந்த திட்டம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். அங்கு வாழக்கூடிய மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்கக் கூடாது. அதுதான் எல்லோரின் விருப்பம். அவர்களின் மூதாதையர்கள் காலம் காலமாக அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், அந்த மண்ணை விட்டு போக வேண்டும் என்றால் அவர்களுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் அதற்கு விருப்பமில்லை. ஆகவே மக்களின் கோரிக்கை தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை .
நிதிநிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். கடன் வாங்கி திட்டங்களைச் செயல்படுத்தும் அளவிற்கு தான் நிதிநிலைமை உள்ளது. அந்த அளவிற்கு கஜானாவை கடந்த கால ஆட்சியில் காலி செய்து விட்டார்கள். இப்போது உள்ள அரசு சிறந்த நிதி மேலாண்மையுடன் செயல்பட்டு வருகிறது. பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். எவ்வளவோ கடன் வாங்கினார்கள் இதற்கும் கடன் வாங்கி இருக்கலாம். இனி வரும் காலங்களிலாவது அதைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
விஜய் எதை வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஆனால் இந்த இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என்று அவர் முடிவு எடுப்பாரானால் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத் தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்றார்.
இந்தியா கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று காங்கிரஸின் அகில இந்திய தலைமை விரும்புகிறதா? என்ற கேள்விக்கு, நாங்களோ அகில இந்திய தலைமையோ அந்த முடிவை எடுக்கவில்லை. அந்த முடிவு எடுக்கப்படும் போது இந்தியா கூட்டணியின் தமிழகத் தலைவர் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன், மாநில பொதுச் செயலாளர் டி. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.