பரந்தூர், காஞ்சிபுரம்:நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வந்தால் விளைநிலங்களும், குடியிருப்புகளும், நீர்நிலைகளையும் அழிந்து போகும் என்பதால், விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விமான நிலைய கட்டுமானப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏகனாபுரம் மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
போராட்டக்காரர்களை விஜய் சந்திக்க உள்ள இடத்தை ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் (ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், போராட்டக்காரர்களை வரும் 19, 20ஆம் தேதியில் சந்திக்க இருப்பதாகவும் அதற்கான காவல்துறை பாதுகாப்பினை அணுக வேண்டும் என தவெக கட்சியினர் காவல்துறையை அணுகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் அய்யநாதன், ஜெகதீஸ்வரர் ஆகிய இருவரும் விமான நிலைய போராட்ட குழுவினரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும், போராட்டக்காரர்களை தவெக தலைவர் விஜய், சந்திப்பதற்காக ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதனை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இதனை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.
பரந்தூர் விமான நிலையத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இக் கட்சியின் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.