தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்! - ERODE BYE ELECTION

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 12:41 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்று ஈரோடு கிழக்கு. திராவிட பேராசான் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இது தொகுதி மறுவரையறைகளின்கீழ் கடந்த 2008-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் ஈரோடு மாநகர் மற்றும் தாலுகா பகுதிகள் உள்ளன.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே, 5 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாக தேர்தலை சந்தித்த தொகுதி ஈரோடு கிழக்கு ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. தந்தை பெரியாரின் சகோதரர் சம்பத்தின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜாவை விட 8904 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46. இதனையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும், தொகுதியை காங்கிரஸுக்கே கொடுத்தது திமுக. அப்போது, காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.

அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில், நடந்த இந்த இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டார். இந்த தேர்தலில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 1,10,156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவாக பாதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, டிசம்பர் 18-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி, சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பத்மாவதி, பாண்டியன் ஆகிய வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் பல தகவல்களை மறைத்து முறைகேடாக போட்டியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், இந்த கோரிக்கையை மட்டும் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட்டு, தேர்தல் முடிந்து விட்டதால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ரத்து கோரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details