சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன். பிரபல ரவுடியான இவர் மீது ஆறு கொலை வழக்குகள் இரண்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மூன்று கொலை வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
சில ஆண்டுகளாகவே தலைமறைவாக இருந்த நிலையில் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையம் பகுதியில் அவர் பதுங்கி இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் அங்கு போலீசார் தேடிய நிலையிலும் அவர் சிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் சென்னை வியாசர்பாடி முன்னாடி நகர் பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு மீண்டும் ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து ரவுடி பாம் சரவணனை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு நாட்டு வெடிகுண்டை வீசி தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் பாம் சரவணன் காலில் சுட்டு கைது செய்தனர். இதை அடுத்து காயம் அடைந்த அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தற்பொழுது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் எழும்பூர் பத்தாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரவுடி பாம் சரவணன் நீதிபதி ரேவதி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
எழும்பூர் பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி விசாரணை மேற்கொண்டு 30 ஆம் தேதி வரை, பாம் சரவணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ரவுடி பாம் சரவணனுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின்பு அவரை புழல் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.