பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவில் இருந்து புறப்படும் ராட்சத பலூன்கள், தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள கிராமங்களில் தரையிறங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வடிவிலான ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு வருகின்றன. ஆனால், காற்றின் வேக மாறுபாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, 2 பலூன்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் தரையிறங்கியுள்ளன.
முதலில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் பயணித்த பலூன், கேரளாவின் கன்னிமாரி பகுதியில் தரையிறங்கியது. இந்த நிலையில், இன்று காலை 7.30 மணி அளவில் மற்றொரு பலூன், பாலக்காடு மாவட்டத்திலுள்ள பத்தஞ்சேரி கிராமத்தில் வயல்வெளியில் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு இடையே தரையிறங்கியது.
வயலில் தரையிறங்கிய ராட்சத பலூன் (ETV Bharat Tamilnadu) இரு சம்பவங்களிலும் பலூனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த தொடர்ச்சியான சம்பவங்கள், பலூன் திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மக்களிடையே அச்சத்தை எழுப்பியுள்ளது. பலூன் பறக்கும் போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் காற்றின் திசை மாற்றம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விண்ணில் பறந்த ராட்சத பலூன் (ETV Bharat Tamilnadu) இதுகுறித்து பேசிய பலூன் திருவிழா ஏற்பாட்டாளர்கள், எதிர்பாராத வானிலை மாற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவித்தனர். மேலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.