சென்னை: சென்னை தியாகாராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தென்னிந்திய மீனவர் பேரவையில் இருந்து 100 நபர்கள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தென்னிந்திய மீனவ பேரவை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதை வரவேற்கிறோம். இலங்கை - இந்தியா நாட்டின் மீனவ சங்கங்களுடன் பேசி தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினேன். இதற்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
வஃக்பு போர்டு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு நல்ல விஷயம் நடக்கும். சில அரசியல்வாதிகள் இந்த சட்டத்தை குழப்புவதற்காக முயற்சிக்கின்றனர். யாருக்கும் எதிரான சட்டம் இது கிடையாது. இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டுள்ள வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் அதிகமாக தாண்டி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதக்க வாய்ப்பை இழந்தார் வினேஷ் போகத். இது ஒரு துரதிஷ்டமானது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.
அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள் ஒதுக்கீடு தீர்ப்பு பாஜக சார்பில் வரவேற்கிறேன். முதல்வர் கோப்பை பள்ளி மாணவர்களுக்கான வயது வரம்பு பிரிவை மாற்றி அமைக்க வேண்டும். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். தாமதமாக இந்த தீர்ப்பு வந்திருந்தாலும் வேகமாக இறுதி தீர்ப்பு வர வேண்டும்.