சென்னை:பத்திரிகையாளர் நிரஞ்சன் மேகோன் எழுதிய 'இந்தியா வென்றது' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (ஜன.11) நடைபெற்றது.இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தைத் திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, விழா மேடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் ஆட்சி நடைபெற வேண்டும். நாட்டில் பலவிதமான பிரச்னைகள் வரும் போது நீதிமன்றம் தன் கடமையைச் செய்கிறது ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கடமையைச் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் பணி எளிதான பணி அல்ல. பத்திரிகையாளர்கள் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், நாட்டில் நடக்கும் பிரச்னைகளை வெளியில் கொண்டு வந்து, உண்மையை மக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.
ரபேல் வழக்கில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் நடந்திருந்தாலும், அதனை வெளியே கொண்டு வர முடியாத சூழலில் பத்திரிகையாளர்கள் இருக்கின்றனர். பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகளைப் பாராளுமன்றத்தைக் காண அனுப்பி வைத்தார்கள். இது எந்த நாட்டிலாவது நடக்குமா? இப்படிப்பட்ட அவல நிலைதான் இன்று இந்தியாவில் இருக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தைக் கையில் எடுத்து, அதை அனைத்து பத்திரிகையாளர்களும் வெளியில் கொண்டு வந்ததன் விளைவாகத்தான் 3 வேளாண் சட்டங்களும் இன்றைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. 'மேக் இன் இந்தியா' என்று சொல்லிவிட்டு 'மேடின் சீனா' என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஒரு தேசியக் கொடியைச் சபாநாயகர்கள் மாநாட்டில், சபாநாயகர் கையில் கொடுத்து வளம் பெறச் செய்தார்கள். இது போன்ற அவல நிலைகளை வெளியில் கொண்டு வந்தவர்கள் பத்திரிகையாளர்கள்.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மதுரை ரயில் திட்டம்: வேண்டாம் என்று சொன்னதே தமிழ்நாடு அரசு தான்!
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு அதிகளவிலான நெருக்கடிகளையும், அச்சுறுத்தல் களையும், கொடுத்தார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி உண்மையை வெளியில் கொண்டு வந்தவர்கள் பத்திரிகையாளர்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் எவ்வாறு தேர்தல் நடந்தது? அதில் நடந்த முறைகேடுகள் எல்லாம் பத்திரிகையாளர்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற நிகழ்வுகளை ஒவ்வொரு முறையும் பொதிகை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்வது வழக்கம். ஆனால், குஜராத் தேர்தல் நடைபெறும் வேளையில் இங்கிருக்கும் நேரடி ஒளிபரப்பு வாகனம் குஜராத்திற்குச் சென்று விட்டது என்று கூறி சட்டமன்ற நிகழ்வுகளுக்கு வரவில்லை.
நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தின் ஆட்சி நடைபெறவும் லட்சக்கணக்கான பத்திரிகையாளர்கள் உண்மை நிலையை வெளியில் கொண்டுவர வேண்டும். பெண்கள் மார்புச் சேலை அணியக்கூடாது, பொது இடங்களில் வரக்கூடாது, என்ற நிலையிலிருந்த போது எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார். அவரை கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு வார்த்தையில் கடந்து போக முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி அவனை உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொல்லும் நபர்கள் இருந்ததால் தான், கடவுள் தேவையில்லை” எனச் சொன்னார்.
இன்றைக்குப் பெண்கள் நாட்டின் அனைத்து இடங்களிலும் பணி புரிகிறார்கள் என்று சொன்னால் அதற்கு வித்திட்ட தந்தை பெரியாரை ஒருபோதும் மறக்க முடியாது. அதேபோல் கல்வி புரட்சியை ஏற்படுத்தி மதிய உணவுத் திட்டத்தைத் தந்த பெருந்தலைவர் காமராஜரை மறக்க முடியாது” என்றார்.