சென்னை:காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் நாடார் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “உத்தரப்பிரதேசத்திற்கும் திட்டம் கொடுக்கவில்லை. அங்கும் அதிகமான எம்.பிக்களை கொடுத்துள்ளார்கள். நான் அரசியல் பேச விரும்பவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர் சென்றால் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுவதற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். அந்த கூட்டம் கூடுதலாக ஒரு மணி நேரம் நடந்தாலும் தவறில்லை.
அந்த கூட்டத்தில் பேச அனுமதி மறுக்கப்படும் என முன்கூட்டியே அறிந்து தான் அக்கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்திற்கு ஏதாவது கொடுத்துள்ளார்களா? என்றால் ஏதுமில்லை. ஏற்கெனவே இருந்த திட்ட கமிஷன் என்பதை தான் நிதி ஆயோக் என மாற்றியுள்ளனர். நிதி ஆயோக் என்பது NITI National Institution for Transforming India ஆகும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒப்படைப்பது தான் நிதி ஆயோக் கூட்டத்தில் நடைபெறும்.
செய்யூரில் 4 ஆயிரம் மெகாவாட் மின் திட்டத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 4 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுத்து வைத்துள்ளார். 2015ஆம் ஆண்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதுவரை டெண்டர் வைக்கப்படவில்லை. வைத்திருந்தால் 2 ஆயிரம் மெகாவாட் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். மின் கட்டணம் உயர்த்தியிருக்க வேண்டியது இருக்காது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை.