மதுரை: மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, புலிப்பட்டி, வல்லாளபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏலத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து, மத்திய அரசு டங்ஸ்டன் தற்காலிகமாக ஏல அறிவிப்பை ஒத்திவைத்தது. தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் கனிம சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய அரசுக்கு தமிழகத் தொல்லியல் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தொல்லியல் அறிஞர்கள் எ.சுப்ராயலு, கோவை - ர.பூங்குன்றன், வேலூர் - நா. மார்க்சிய காந்தி, சென்னை - ஆ.பத்மாவதி, சு.இராசகோபால், ச.செல்வராஜ், கி. ஸ்ரீதரன், தர்மபுரி - வெ.வேதாசலம், மதுரை - மா.சந்திரமூர்த்தி, காஞ்சிபுரம் மற்றும் இதர தமிழ்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் சார்பாக, தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் இன்று(டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமணத் தலம்:
அதில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டி எனும் சிற்றூர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டதாகும். இங்குள்ள கழிஞ்சமலை என்னும் மலையில் சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு தமிழி (Tamil Brahmi) கல்வெட்டுகள் உள்ளன. இவை ஒரு தொன்மையான சமணத் தலமாகும்.
இதையும் படிங்க:டங்ஸ்டன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விவசாயிகள் - ஜனவரி 7-ல் போராட்டம் அறிவிப்பு!
கிபி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடைவரை (சிவன்) கோயில், மிக அரிய லகுலீசர் சிற்பம் ஒன்றும் இங்குள்ளது. தமிழி கல்வெட்டுகள் காணப்படும் இடத்தின் அருகிலேயே சுமார் 10 அடி தூரத்தில் மலையில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பம் வெட்டப்பட்டு அதன் கீழ் அதனை வெட்டுவித்தவர் பெயரும், ஊரின் பழமையான பெயரும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்தில் உள்ளது.
'திருப்பிணையன் மலை பொற்கோட்டுக் காரணத்தார் பேரால் அச்சணந்தி செய்வித்தத் திருமேனி பாதிரிக் குடியார் ரட்சை' என்பது அந்தக் கல்வெட்டின் வாசகம். இக்கல்வெட்டின் படி இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குடி என அழைக்கப்பட்டது. இம்மலையின் பெயர் திருப்பிணையன் மலை என்றும், இச்சிலையைச் செய்தவர் அச்சணந்தி என்ற சமண துறவி என்பதும் அறியப்படுகிறது.