தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக - கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது.
தென்காசி அடுத்த குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தேர்தலின் போது எல்லைப் பகுதியில் மேற்கொள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனையை இரு மாநில காவல் துறையினரும் ஒன்றிணைந்து மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.K.சுரேஷ்குமார் மற்றும் கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபு மேத்யூ தலைமையில் நடைபெற்றது.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் புனலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்டுவேர்ட் கீலர், தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் எல்லைப் பகுதியான தென்மலை மற்றும் அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரு மாநில காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.