திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கல்யாணமகாதேவி அனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் தந்தை கந்தவடிவேல். இவர் விஜயபுரம் சிட்டி யூனியன் வங்கி கிளையில் கடந்த 29.05.1991ஆம் ஆண்டில் அவருடைய விவசாய நிலத்திற்கு போர்வெல் அமைப்பதற்காக தனக்கு சொந்தமான நான்கு பத்திரங்களை அடமானம் வைத்து விவசாய கடனாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
இதில் மானியமாக 5ஆயிரம் ரூபாய் போக மீதத் தொகையான 15 ஆயிரத்தை பல தேதிகளில் செலுத்தி வந்த நிலையில், 4.10.1994ல் கந்தவடிவேல் உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் போது 3ஆயிரத்து 600 ரூபாய் பணம் வங்கிக்கு மீதம் செலுத்த வேண்டி இருந்துள்ளது. அவரது இறப்புக்கு பிறகு அவரது குடும்பத்தாரால் அந்த தொகையையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக வங்கி தரப்பில் சீனிவாசன் மற்றும் அவரது தாய் பொன்னேஸ்வரிக்கு எதிராக திருவாரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது பொன்னேஸ்வரி உயிரிழந்துள்ளார். அந்த வழக்கில் வங்கிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து சீனிவாசன் திருவாரூர் சார்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதில் 8.4.2008ஆம் ஆண்டில் சீனிவாசனுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இதனையடுத்து சீனிவாசன் அவரது தந்தை கந்தவடிவேல் அடமானம் வைத்த ஆவணங்களை வங்கிக்குச் சென்று கேட்டதற்கு முறையாக் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக எந்தவித முறையான பதில் கிடைக்காததால், கடந்த 20.10.2023 அன்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று ஆணையத் தலைவர் சேகர் மற்றும் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த அமர்வு, அடமானமாக பெற்ற ஆவணத்தை திரும்ப கொடுப்பதற்கான கடமையும் பொறுப்பும் வங்கிக்கு தான் உள்ளது என்றும் சீனிவாசனின் மனு சம்பந்தப்பட்ட திருவாரூர் விஜயபுரம் கிளை சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் மற்றும் கும்பகோணம் காந்தி நகர் சிட்டி யூனியன் வங்கி தலைமை அலுவலக மண்டல மேலாளர் ஆகியோர் சீனிவாசனின் தந்தையிடம் வாங்கிய ஆவணங்களை திருப்பி கொடுக்கவும், தடையில்லா சான்று வழங்கிடவும் உத்தரவிட்டனர்.
மேலும், மன உளைச்சலுக்காக 2 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்தில் வழங்கவும் உத்தரவிட்டனர். வங்கிகள் பிறப்பித்த உத்தரவை தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.
இதையும் படிங்க:தாசில்தாரை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்பட 17 பேர் விடுதலை.. மதுரை நீதிமன்றம் உத்தரவு!