திருவண்ணாமலை: ஆன்மீகத் தலமான திருவண்ணாமலைக்கு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொள்ள திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, பஞ்சபூத தளங்களில் அக்னித்தளமாக விளங்கும் திருவண்ணாமலை புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரும் வந்து செல்லுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் இணைப்பு நகரமாக திருவண்ணாமலை திருத்தலம் அமைந்துள்ளது. ஆகவே, திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்களின் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது.
இத்தகைய சூழலில், திண்டிவனம் - திருவண்ணாமலை திட்டம் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் உள்ள நிலையில், தற்போது சென்னை கடற்கரை(Chennai Beach) ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு 50 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ரயில் மாலை 6:00 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன்மண்ட், பென்னாத்தூர்(Pennathur), கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி சாலை, மடிமங்கலம், போளூர் வழியாக நள்ளிரவு 12:05 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இதே வழித்தடத்தில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் இன்று(03.05.2024) காலை 4 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்ட ரயிலுக்கு திருவண்ணாமலை வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:6 ஆண்டுகளுக்குப் பின் வெளியே தெரியும் டணாய்க்கன் கோட்டை.. அதன் வரலாறு தெரியுமா?