மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு திருவண்ணாமலை:குறுகிய காலத்தில் அதிக லாபத்தைத் தரக்கூடிய விவசாய பயிர்களில் ஒன்று மல்பெரி பயிர்கள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு. மல்பெரி பயிர்கள் பட்டுப் புழுக்களுக்கு முக்கியமான தீவனமாக இருப்பதால் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டுப் பட்டுப் புழு வளர்ப்பு செய்து அசத்தி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பட்டுப் புடவைகளுக்குப் புகழ்பெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாகப் பட்டுப் புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளாக மல்பெரி பயிர்களைப் பயிரிட்டு வருகின்றார்.
மல்பெரி பயிர்கள் வறட்சி தாங்கும் பயிராகும். இயற்கை உரமான மாட்டு சானம், தழை, ஆகியவை பயன்படுத்திப் பயிரிட்டுப் பட்டுப் புழு வளர்ப்பு செய்து வருகின்றனர். பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயி அண்ணாமலை கூறுகையில், “இந்த பட்டுப் புழு வளர்த்துப் பட்டு எடுக்க மொத்தம் 27 நாட்கள் ஆகின்றனர். இந்த பட்டுப் புழு வளர்ப்புக்குக் கிருஷ்ணகிரியிலிருந்து பட்டுப்புழு முட்டை கொண்டுவந்து பதப்படுத்தப்படுகிறது.
10 தொகுதி கொண்ட முட்டையை வாங்கினால் அவை 3000 முதல் 5000 வரையிலான புழுக்களை உருவாக்கும். முதல் 3 நாட்கள் முட்டைகள் இருட்டு அறையில் வைக்கப்பட்டு பின்பு 7 நாட்கள் இருட்டு மற்றும் வெளிச்சம் அளிக்கப்படுகிறது. அப்போது , மல்பெரி இலையைப் பொடியாக்கி 5 நாட்கள் வரை அவற்றிற்கு உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.
அதன்பிறகு அலமாரி அமைத்து மல்பெரி இலை தண்டுகள் உணவாக 15 நாட்கள் வரை போடப்படுகிறது. பின்பு புழுக்கலானது கூடு வளையில் மூன்று நாட்கள் வரை நூல் சுற்றும் . 2 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தர்மபுரி பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பட்டுப் புழுவிலிருந்து வரும் பட்டு 27 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்படுகிறது. 80 கிலோ முதல் 100 கிலோ வரை பட்டு கிடைக்கின்றது
ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு வேலை செய்யக் குறைந்த ஆட்கள் இருந்தாலே போதும். பட்டுப் புழு வளர்ப்பதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகிறது. இந்த செலவினங்கள் போக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க:ஏற்காட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு!