தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தியாளர் நேச பிரபு மீது கொடூர தாக்குதல்; சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் பத்திரிகையாளர்கள்! - News 7 TV reporter attack

Reporter attack issue: தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபுவைத் தாக்கிய மர்ம கும்பலைக் கண்டுபிடித்து விரைவில் கைது செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து அப்பகுதியில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 6:42 PM IST

திருவள்ளூர்:தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்ட நிலையில், இதற்குக் காரணமான குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர்கள் இன்று (ஜன.25) சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று (ஜனவரி 24) நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று இவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த நேச பிரபுவை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்குத் திருவள்ளூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று (ஜனவரி 25) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு, கையில் பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் எதிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் வளாகம் நுழைவாயில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நகரக் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூத்த செய்தியாளர் ஒருவர் பேசுகையில், "குற்றவாளிகளைத் தாமதம் இன்றி உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயலுக்குக் காரணமான உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து தயவு தாட்சியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியாளர் நேச பிரபுவிற்கு உயர் சிகிச்சை அளிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனப் போக்கு கைவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details