திருவள்ளூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேட்பு மனுத் தாக்கல் செய்யும் அவகாசமானது நாளையுடன் நிறைவு பெற உள்ளதால், பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், இன்று அம்பேத்கார், பாரதியார், ராஜராஜ சோழன் போன்ற வேடங்களை அணிந்த தொண்டர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வந்தார்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுசங்கரைச் சந்தித்து, ஜெகதீஷ் சந்தர் தனது வேட்பு மனுவை அளித்தார். இந்த நிலையில், தமிழில் உள்ள உறுதி மொழி பத்திரத்தை வாசிக்க முடியாமல் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் திணறினார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுசங்கர் வாசிக்க, அவரை பின்தொடர்ந்து வேட்பாளர் உறுதிமொழியை வாசித்தார்.