திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு திருவள்ளூர்: மாதவரம் சட்டமன்றத் தொகுதி பாலவேடு கிராம ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர்ப் பகுதியில் 500 குடியிருப்புகளில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 3 தலைமுறைகளாகக் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மின் இணைப்புகள், ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வசித்து வருகின்றனர்.
தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைஞர் இலவச வீட்டுமனை பட்டாவைக் கிராம நத்தம் பட்டாவாக மாற்றி வழங்கிட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட சாஸ்திரி நகர்ப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலை மறியல் செய்ய முயற்சித்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டா அரசாங்கம் பதிவேட்டில் பதியவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த 7 ஆண்டுகளாக அரசு சலுகைகள் முடக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கும் கிராமத்தினர், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சாஸ்திரி நகர் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முயன்ற நிலையில், அப்போது அங்கு வந்த முத்த புதுப்பேட்டை போலீசாரால் கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வருவாய்க் கோட்டாட்சியர் கற்பகம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கிராம மக்களிடம் மனுக்களைப் பெற்ற வருவாய்க் கோட்டாட்சியர் கற்பகம், புதிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மூன்று தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசித்து வரும் நிலையில், சமீப காலமாக அரசின் சலுகைகள் கிராம மக்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.
வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வந்ததை தற்போது நிறுத்தி உள்ளனர். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில் எதற்கு வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தனர். மேலும் தேர்தலுக்குள் ஏதேனும் முடிவு தெரியாத பட்சத்தில் நிச்சயமாக வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அடுத்தகட்டமாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்வோம் எனக் கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - Died Drown In River Water