தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி" - திருவள்ளூர் கலெக்டர் உறுதி! - Chennai Rain

சென்னையில் பெய்த கனமழை காரணமாக மழைநீரில் மூழ்கிய ஆவடி சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் "வரும் காலத்தில் இங்கு மழைநீர் தேங்காது எனவும், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்யும் காட்சி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்யும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 3:13 PM IST

சென்னை:சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செப்.25ஆம் தேதி இரவு முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக, சாலையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர். அதில், ஆவடி அடுத்த சேக்காடு ரயில்வே சுரங்கப் பாதையில் 12 அடி உயரம் வரை மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், தேங்கிய மழைநீரை வெளியேற்ற ஆவடி மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்களை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று (செப்.26) சேக்காடு ரயில்வே சுரங்கப் பாதையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட அவர், உடனடியாக மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சேக்காடு அண்ணாநகர் மழைநீர் வடிகால்வாயை பார்வையிட்டு அதிலுள்ள அடைப்புகளை அகற்றி மழைநீர் வேகமாக வெளியேற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், "ஆவடி மாநகராட்சி ஆணையர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், ஆவடியில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் தற்போது வடிந்துள்ளது. தற்போது, சேக்காடு சுரங்கப் பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது, தற்போது அவற்றையும் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இனிவரும் மழைக்காலங்களில் இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க, தேவையான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில், தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டு, அடுத்த கனமழைக்குள் வெள்ளப்பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறைச் சார்பில் பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. அதனால், மழைநீர் தேங்கும் இடங்களில் கூட வெள்ளப்பாதிப்பு ஏற்படாததைக் காண முடிகிறது.

இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய சேக்காடு சுரங்கப்பாதை, கொரட்டூர் இஎஸ்ஐ.. நிரந்தரத் தீர்வு காண கோரிக்கை!

ஒரே நேரத்தில் அதிகபட்ச மழை பெய்யும் போது, வெள்ளம் தேங்குவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை வடியச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் பெரும்பாலான வார்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியும் நடந்து வருகிறது. பொதுமக்கள் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் இணைப்பு கொடுக்கும் போது, அவை பாதுகாப்பாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

கடந்த 2021-ல் தான் பாதாளச் சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட இடங்களில் பாதாளச் சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்க உள்ளன. இவை அனைத்தும் முடியும் போது, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details