திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் வெள்ளகோயில் கிளை கால்வாய் பாசன சபை ஒருங்கிணைப்பில் அனைத்து விவசாயிகள் அமைப்புகள் சார்பில் நாய்கள் கால்நடைகளை கடித்து பலியாகும் சம்பவம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கக் கூறி போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை, ரேஸ் குதிரை, ரேக்ளா காளைகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் வந்தனர். மேலும் நாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளை பகவதிபாளையம், காங்கேயம் - கரூர் சாலையில் வரிசையாக போட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் விவசாயிகள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. காங்கேயம் ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், டிஎஸ்பி மாயவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் விவசாயிகள் கால்நடைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:“மதம் என பிரிந்தது போதும்..” பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நாகத்தம்மாள் கோயிலில் இருந்து சீர்வரிசை!
இந்த போராட்டம் குறித்து பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் கூறுகையில், “சில மாதங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் தெருநாய்களால் கொல்லப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தெருநாய்களால் கொல்லப்படும் ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மாநகராட்சி தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து விவசாயி ஞானப்பிரியா கூறுகையில், “தெரு நாய்களால் ஆடுகள் கடித்துக் கொல்லப்படுவதை தடுக்க கோரி ஏற்கனவே போராட்டம் நடத்தினோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அளித்த வாக்குறுதியை காவல்துறை இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் சிவபாலகங்கா என்பவர் கூறுகையில், “அடிக்கடி தெரு நாய்கள் ஆடுகளை கொன்று விடுகின்றன. மனிதர்களையும் கடிக்கின்றன. எங்களுக்கு வாழ்வாதாரமே கால்நடைகள்தான் ஆனால் எங்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. ஆடுகள், தெருநாய்களால் கொல்லப்படும் சம்பவத்தில் நிரந்தர தீர்வு வேண்டும்” என்றார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் விவாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முதல்கட்டமாக 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்