தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தேனா? - திருப்பூர் பாஜக வேட்பாளர் அளித்த விளக்கம்! - 2024 lok sabha election

AP Muruganandam: தேர்தல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார்.

AP Muruganandam
AP Muruganandam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 1:26 PM IST

பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்கள் சந்திப்பு

திருப்பூர்:கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட முயன்ற தேர்தல் பறக்கும் படையினரை "வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்" என பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், குன்னத்தூர் காவல்துறையினர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) திருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழகத்தில் மக்கள் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்களிடத்திலே எடுத்து சொல்லி தாமரைக்கு வாக்குகள் சேகரித்து வருகிறோம். மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். 100 சதவீதம் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும்.

வைரல் வீடியோவிற்கு மறுப்பு?:நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாகப் பேச வேண்டும். வானத்தில் இருந்து பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான்.

நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதைப் பார்த்து சும்மா என்னால் போக முடியாது. மரியாதையாகப் பேசுமாறு கூறினேன். நான் பேசியதில் பாதி வீடியோவை எடிட் செய்து போட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் பறக்கும் படை கேமரா மேன் வீடியோ எடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு நேரடியாகக் காணொளியை அளித்திருப்பதன் மூலம் திட்டமிட்டு இதைச் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனக்காக காத்திருந்து நடக்கக் கூடிய விஷயம் இது. என்னுடைய தேர்தல் பயணத்தை முடக்க வேண்டி செய்கிறார்கள். மக்கள் முடிவு செய்து விட்டார்கள் இந்த முறை தாமரை தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்றைய நாள் முழுவதும் நான் பிரச்சாரத்தில் இருந்த காரணத்தால் என்னால் புகார் அளிக்க முடியவில்லை. இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை துன்புறுத்துகிறார்கள்,விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள். அதை கேட்கும் போது எடுத்த வார்த்தைக்கு "உங்கள் மீது வழக்குப்போடுவோம்" என சொன்னார்கள். அதனால் நானும் உங்கள் மீது வழக்குப்போடுவேன் என்று கூறினேன். இந்த விவகாரத்தை சட்டப்படி அணுக உள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா? - 44 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை! -

ABOUT THE AUTHOR

...view details