திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30) என்பவர் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமாகி உள்ளார்.
செயலியைத் தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமும் இருவரும் பேசி வந்துள்ளனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சத்யா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் மகேஷ் உடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இருவரும் பழகி வந்த நிலையில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மகேஷ் அரவிந்தை சத்யா வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் மகேஷ் அரவிந்த்துக்கும், சத்யாவுக்கும் கடந்த ஜூன் மாதம் பழனி செல்லும் வழியில் உள்ள தொப்பம்பட்டி அடுத்துள்ள பூசாரி கவுண்டர் வலசில இருக்கும் வீரமாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தை மகேஷின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டதுடன், 7 பவுனில் கொடி, 4 பவுனில் செயின் மற்றும் 2 பவுனில் மோதிரம் எடுத்து வந்து கொடுத்துள்ளனர். 3 மாதங்கள் கடந்த பின் சத்யாவின் நடவடிக்கையில் மகேஷ் அரவிந்துக்கு சந்தேகம் வரவே, அவரது ஆதார் அட்டையைப் பார்த்துள்ளார்.
அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் அரவிந்த் சத்யாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சத்யா, மகேஷையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி உள்ளார்.
இதனால் உஷாரான மகேஷ், சத்யாவிடம் சமாதானம் செய்வதுபோல் பேசி தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த விசாரனையின் இடையே சத்யா தலைமறைவாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சத்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருள், கரூரை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பலரை ஏமாற்றி திருமணம் முடிந்துள்ளது, அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
திருமணம் ஆகாத 40 வயதைக் கடந்த ஆண்களைக் குறிவைத்து சத்யா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது, சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரிலிருந்து காவல் துறையினர் என பல தொழிலதிபர்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். இதற்கு தமிழ்ச்செல்வி உடைந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனிடையே, தப்பி ஓடிய சத்யாவை மொபைல் போன் சிக்னல் வாயிலாக தேடிய நிலையில், நேற்று இரவு பாண்டிச்சேரியில் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சத்யாவை பிடித்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை 12 பேரை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கல்யாண ராணி சத்தியாவால் ஏமாற்றப்பட்டு, புகார் அளித்த மகேஷ் அரவிந்தின் 85 வயதான தாத்தா கருப்பசாமி என்பவர், பேரன் ஏமாற்றம் அடைந்ததை நினைத்து மனவேதனையில் இருந்ததாகவும், இதுகுறித்து பலரிடம் புலம்பி வந்ததாகக் கூறப்படும் நிலையில், 15 நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வங்கி வாசலில் ரூ.6.10 லட்சம் பணம் திருட்டு.. புகார் அளித்த நபரையே தேடும் போலீசார்.. காரணம் என்ன?