திருப்பூர்:ஆயிரம் மூன்றாம் பிறைகளை பார்த்தவர்கள் சதாப்த பூர்த்தி அடைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், 1,300 மூன்றாம் பிறைகளுக்கு மேல் கண்டவர் திருப்பூர் சின்னக்காளி பாளையத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள். அவருக்கு வயது 107. கரைப்புதூர் சின்னக்காளிபாளையத்தில் ஆறுமுக முதலியாரின் மனைவியான இவர், கணவருடன் இணைந்து நெசவுத்தொழில் செய்து வந்து இருக்கிறார்.
இப்போது 107 வயதான நிலையில் மகன் வீட்டில் வசிக்கிறார். ஆனாலும், இன்னும் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். பேச்சியம்மாளுக்கு மொத்தம் 3 மகன்கள், 2 மகள்கள், 8 பேரன்கள், 5 பேத்திகள், 12 கொள்ளுப்பேரன்கள், 6 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். இதில் 5வது தலைமுறையாக 2 வயதான ஒரு எள்ளுப்பேரனும் இருக்கிறார். "கம்பு, வரகு, திணை, கோதுமை இத்துடன் சிறிது அன்பையும் கலந்து வாழ்வியலோடு இணைத்துக் கொண்டதால் 107 வயதைக் கடந்தும் மன நிம்மதியோடு வாழலாம்" என்கிறார் பேச்சியம்மாள்.
உறவுகள் அனைவரையும் அன்போடு அரவணைப்பதால், இவரது 107வது பிறந்தநாளைக் காண 600க்கும் மேற்பட்டோர் வந்து பேச்சியம்மாள் கனகாபிஷேகத்தில் ஆசிகளைப் பெற்றுச் சென்றனர். கனகாபிஷேகத்தின் போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. மந்திரங்கள் ஒத, அக்னி முழங்கிட சிறப்பான முறையிலே கனகாபிஷேகம் நடைபெற்றது.
பரதநாட்டியம், வள்ளி கும்மியாட்டம் என பாரம்பரியக் கலைகளை உறவுகளே ஆடிப்பாடி பாட்டியை பெரும் மகிழ்ச்சி அடையச் செய்தனர். தங்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பேச்சியம்மாளுக்கு சிறப்பான ஒரு விழா வைக்க வேண்டும் என அனைத்து உறவுகளும் எண்ணி, வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒரு வாரத்துக்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளும் செய்ததாக கூறுகின்றனர்.