திருப்பத்தூர்: எந்திர பழுது காரணமாக திருப்பத்தூர் கூட்டுறவு சர்ககரை ஆலையில் அரவை தொடங்கிய அடுத்த நாளே ஆலை நிறுத்தப்பட்டதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு பால் பாழானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 19ஆம் தேதி 2024-25-ம் ஆண்டு அரவைப் பருவத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது. கரும்பு அரவை துவங்கிய நிலையில் சுமார் 1000 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் திடீரென ஆலை இயங்குவது நிறுத்தப்பட்டது. விவசாயிகள் காரணம் கேட்டபோது அரவை எந்திரத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தினால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை அரைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கரும்பு பால் உபயோகமின்றி வீணாய் போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கரும்பு அரவைக்கு கொண்டுவரப்பட்ட பல டன் மதிப்பிலான கரும்புகள் லாரியில் நிறுத்தப்பட்டு உள்ளது மேலும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கரும்பின் எடை குறையும் என்பதாலும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் முல்லை, "கரும்பு அரவை தொடங்கப்பட்ட அடுத்த நாளே அரவை இயந்திரம் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. இதனை முன்கூட்டியே சோதித்து சரி செய்திருக்க வேண்டிய கரும்பு அரவை மேலாளர், மெத்தனப்போக்காக செயல்படுகிறார். இதில் அலட்சியமாக செயல்பட்ட கரும்பு அரவை மேலாளர், தலைமை பொறியாளர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்க செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்," என்று கூறினார்.
மேலும், ஆலைக்கு செல்லும் சாலையில் விவசாயிகளின் கரும்பு லோடுகளுடன் ஏராளமான லாரிகள் காத்துக்கிடக்கின்றன. இது குறித்து பேசிய லாரி ஓட்டுநர் ஒருவர்,"காலை முதல் சாப்பாடு இல்லாமல் தவிக்கின்றோம். ஆலை இயங்குமா இயங்காதா என அதிகாரிகள் எந்த ஒரு தகவலையும் அளிக்க மறுக்கின்றனர். மேலும் லாரிகள் வெயிலில் நிற்பதால் கரும்பு எடை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்," என்றார்.
மேலும் இதுகுறித்து சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில், "கரும்பு ஆலையில் 3 மற்றும் 4 ஆம் எண் இயந்திரம் சில கோளாறுகளால், சரியாக இயங்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள், இயந்திரத்தை சரிசெய்து ஆலையை இயக்க நடவடிக்கை மேற்கொள்கின்றோம்," என தெரிவித்தனர்.