திருநெல்வேலி:உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தெய்வப்பிரசாதமாக பார்க்கப்படும் லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் மாமிச கொழுப்பு சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏழுமலையான் பக்தர்கள் மட்டுமின்றி ஆன்மீக அன்பர்கள் மிகவும் மன வருத்தம் அடைந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு வழிபாடு நடத்தி பஞ்சகவ்விய சம்ப்ரோக்ஷணம் நடத்த திட்டம் இடப்பட்டு இன்று காலை முதல் அதற்கான பிரார்த்தனைகளும், பூஜைகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து தகவல் வெளியிட்டது. அதில் உலக மக்கள் நன்மைக்காகவும், தோஷம் நீங்கவும் பிரார்த்தனை மேற்கொண்டு வீடுகளில் விளக்கேற்றி ஓம் நமோ நாராயணா மந்திரத்தை உச்சரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம்! தேவஸ்தானம் கொடுத்த முக்கிய அறிவிப்பு
அதன்படி நெல்லை வண்ணாரப்பேட்டை பாலாஜி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பெண்கள் வீடுகள் முன்பு விளக்கேற்றி ஓம் நமோ நாராயணா மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் திருப்பதி கோவில் ஏற்பட்ட தோஷத்தினால் பொதுமக்கள் யாரும் பாதிப்படைந்து விடக் கூடாது என்ற பிரார்த்தனை வைத்து பாலாஜி நகர் கன்னிமூல கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடும் மேற்கொண்டனர்.