சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலி:நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 9.5 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தின் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (பிப்.17) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு பேசுகையில் “ திருநெல்வேலி மாவட்டத்தில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் LED திரை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 33 மாத திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னென்ன சாதனைகள் செய்துள்ளார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகத் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இதனைத் திறந்து வைத்துள்ளோம் என்றார்.
பின்னர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்க நீங்கள் உத்தரவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது அது உண்மையா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அப்பாவு ‘நீங்களே சமூக வலைத்தளங்களில் போட்டுக்கொண்டு அது குறித்து நீங்களே கேள்வி கேட்கிறீர்கள்’ என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை, என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு? ஆளுநர் நடுநிலையாகச் செயல்படவில்லை என்ற அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலையின் கருத்திற்கு நன்றி எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு; மார்ச் 16-இல் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு!