திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி அருகே இறைப்பு வாரி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வசிப்பவர் பேச்சியம்மாள் என்ற மூதாட்டி. 95 வயதான மூதாட்டி பேச்சியம்மாளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகிச் சென்ற நிலையில், ஒரே மகனும் தன் தாயான மூதாட்டியை தவிக்கவிட்டுச் சென்று விட்டார்.
எனவே, உதவிக்கு ஆதரவில்லாமல் தவிக்கும் மூதாட்டி பேச்சியம்மாள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வருமானமும் இல்லாமல், ஆதரிக்க ஆளும் இல்லாமல் வறுமையில் வாடிய மூதாட்டியின் நிலையைக் கண்டு, பக்கத்து வீட்டு பெண்ணான கலைச்செல்வி மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளனர், ஆனாலும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதிகாரிகள் ரேசன் கார்டு போன்று ஆதாரங்கள் கேட்டு தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கலைச்செல்வி இன்று மீண்டும் மூதாட்டி பேச்சியம்மாளை அழைத்துக் கொண்டு சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ந்த குறைதீர் முகாமிற்கு வந்தார்.
அப்போது, ஆட்சியர் கார்த்திகேயனைச் சந்தித்து மூதாட்டியின் நிலை குறித்து விளக்கிய கலைசெல்வி, மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்கும்படி மனு கொடுத்துவிட்டு திரும்பினார். இதனையடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஹரிகரன், பேச்சியம்மாளிடம் அவரது மனு குறித்து கேட்டறிந்து, தனது மகன் போல் நினைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி, மூதாட்டியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார்.