சென்னை:நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கல்லாகட்டும் நோக்கத்தில் மட்டுமே இந்த படத்தை தயாரித்துள்ளனர் என எஸ்டிபிஐ நெல்லை முபாரக் விமர்ச்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டமானது கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்து செய்தியாளர்கள் சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், “தற்போது வெளியாகி உள்ள அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளதாக திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இந்த படத்தில் சிறுபான்மையினரை கொச்சையாக சித்தரித்து காண்பித்துள்ளனர்.
இதனை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சினிமா நிறுவனமும் படமாக எடுத்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் கல்லாகட்டும் நோக்கத்தில் மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை குற்ற பரம்பரையாக காட்டும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும். அது குறித்த காட்சிகளை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தையும், இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளையும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று முற்றுகையிட உள்ளோம்.