திருநெல்வேலி: தென் தமிழகத்திற்கு அடுத்த மூன்று நாட்கள் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று (மே 19) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 20.46 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பரவலாக நெல்லை மாவட்டம் முழுவதும் மழை பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, கொடுமுடியாறு அணைப்பகுதியில் 45 மில்லி மீட்டரும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மாவட்டத்தின் பிரதான பாசன அணை அமைந்துள்ள பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அதேபோல, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 33 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 28 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 14 மில்லி மீட்டரும் மற்றும் மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் என கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு பதிவாகியுள்ளது.
மேலும், சமவெளி பகுதிகளான ராதாபுரத்தில் 19 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாது, நம்பியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டரும் மழையின் அளவு பதிவாகியுள்ளது.