திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபல தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த ஏழு மாணவர்கள், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனை தாக்கியதாக தெரிகிறது. இதில் தாக்கப்பட்ட மாணவனின் முதுகு, கண், முகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்காத நிலையில் மாணவன் வீட்டிற்கு சென்றதும், அவனது குடும்பத்தினர் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் மாணவனை அனுமதித்துள்ளனர்.
அதில் அவருக்கு கண், முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவனின் குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர், மாணவனின் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த ஏழு மாணவர்கள் இணைந்து குறிப்பிட்ட சமூகத்தைச் மாணவனை தாக்கியதாக தெரியவந்த நிலையில், அந்த ஏழு மாண்வர்களையும் கைது செய்து திருநெல்வேலி சிறுவர் சீர்திருத்த பள்ளியின் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளுமாறு நீதிபதி அறிவுரை வழங்கிய நிலையில், மாணவர்கள் நலன் கருதி அவர்களை சொந்த ஜாமீனில் போலீசார் விடுதலை செய்தனர்.