திருநெல்வேலி:திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றிய இடங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களில் வசிக்கும் மக்களுக்கு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை பாட்டி கற்பகம் (Video Credits - ETV Bharat Tamilnadu) ஆனால், பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் விரைந்து செயல்படுத்த முடியாத காரணத்தினால் அவர்கள் நிலத்தடி நீரை நம்பி, ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு முறப்பநாட்டில் இருந்து குடிநீர் வழங்குவதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே விரிவாக்க பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குழாய்கள் உடைப்படுவதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி போராட்டங்களில் ஈடுபடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மேலப்பாளையம் மண்டலத்தில் 41- வது வார்டுக்கு உட்பட்ட பொதிகை நகர், போலீஸ் குடியிருப்பு, அப்பல்லோ காலனி, வி.ஜி.பி. நகர், சண்முகா நகர், சாரல் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்வது இல்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், நேற்று பொதுமக்கள் குடத்துடன் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பெருமாள்புரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில், கற்பகம் பாட்டி நெல்லை வழக்காடு மொழியில் தண்ணீர் திறக்கும் நபரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தனது மன குமுறல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவில் அந்த பாட்டி தண்ணீர் பிரச்சனை மட்டுமின்றி, தண்ணீர் பிரச்சனையால் தன்னால் ஒரு நாடகம் கூட பார்க்க முடியலை என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது தான் ஹைலைட்டாக உள்ளது. இதுதொடர்பாக அந்த பாட்டி கூறியதாவது, “ஒரு காலத்தில் பொதிகை நகர் பகுதியில் நிலத்தடி நீர் நன்றாக இருக்கும் என்று கூறி ஏராளமான மக்கள் இங்கு குடி பெயர்ந்தனர். ஆனால், தற்போது அதற்கான மவுசு போய்விட்டது. 3 வருடங்களாக இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது.
அதையும் அவர்கள் நினைத்த நேரத்தில் தான் திறந்து விடுகிறார்கள். இரவு 10 மணிக்கு, 2 மணிக்குக்குனு தண்ணீ திறக்காங்க. தண்ணீர் எப்போது வரும் என்று நாங்கள் எங்கள் வீட்டு தொட்டியை உற்று உற்று பாக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மணி கணக்கு இல்லாமல் தண்ணீர் திறக்கும் ஆட்களை ஏன் வேலைக்கு வைக்கிறீர்கள். உடனடியாக அவர்களை டிஸ்மிஸ் செய்யுங்கள். அந்த ஆள் தேவையில்லை.
இந்த தண்ணீர் பிரச்சனையால் எங்களால் ஒழுங்காக நாடகம் கூட பார்க்க முடியவில்லை. எப்போது நாங்கள் நாடகம் பார்ப்பது. எல்லா நாடகமும் வீணாகிறது. தண்ணீக்காக தொட்டியை பாத்துக்குட்டே இருக்குறதுக்குல்ல நாடகம் முடிஞ்சுடுது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் ஆழ்துளை குழாய்களும் கிடையாது. இதனால் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீரை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கொடுங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
கற்பகம் பாடி தண்ணீர் பிரச்சனை இருப்பதால் சீரியல் கூட பார்க்க முடியவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் பேசிய பேச்சை கேட்டு அங்கு நின்ற பொதுமக்கள் வயிறு குலுங்க சிரித்தனர். ஒரு சிலர் அந்த மூதாட்டியின் பேச்சை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:தெரு நாய்கள் தொல்லை: இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - நீதிபதிகள் கேள்வி!