திருநெல்வேலி:2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்கான தேதி இம்மாதம் அறிவிக்கப்படும் என்று நிலையில், அரசியல் கட்சியினர் ஒருபுறம் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு என பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக என தேர்தல் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே, நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பட்டியலை வெளியிட்டது மட்டுமல்லாமல், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று (மார்ச் 1) அவர் வள்ளியூர் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்பகுதியில் உள்ள கடைகள், பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று, பொதுமக்களிடம் தனக்கு ஓட்டு போடும்படி வாக்கு சேகரித்தார். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த தேர்தலிலும், அதே சின்னத்தை அக்கட்சி கோரிய நிலையில், கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் நீடித்து வருகிறது. ஏனெனில், ஏற்கனவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சியினருக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.