தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை பல்கலை பேராசிரியர்களிடம் கத்தி முனையில் கொள்ளை.. கொலை செய்ய திட்டமா? - professors robbed in Tirunelveli - PROFESSORS ROBBED IN TIRUNELVELI

Professors Robbed at Nellai: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களைத் தாக்கிவிட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் ஏடிஎம் கார்டை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli Manonmaniam Sundaranar University professors robbed at knifepoint
Tirunelveli Manonmaniam Sundaranar University professors robbed at knifepoint

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:42 PM IST

Updated : Apr 27, 2024, 8:27 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிபவர் ரமேஷ் (51). அதே துறையில் உதவி பேராசிரியையாக பணிபுரியும் ஜெனிதா (43), நேற்று முன்தினம் (ஏப்.24) மாலையில் பல்கலைக்கழகத்தில் இருந்து பணி முடிந்ததும் பேராசிரியர் ரமேஷ் உடன் காரில் சென்றுள்ளனர்.

நாகர்கோவில் சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் ஜெனிதா வீட்டு முன்பாக காரில் இருந்து இறங்கிய போது, ஏற்கனவே அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து காத்திருந்த மர்ம நபர்கள் மூன்று பேர், உதவிப் பேராசிரியை ஜெனிதாவை தாக்கியுள்ளனர்.

இதனைத் தடுப்பதற்காக காரில் இருந்து இறங்கிய பேராசிரியர் ரமேஷையும் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். கத்தியின் பின்புறத்தால் ரமேஷ் கழுத்திலும், முதுகிலும் தாக்கியுள்ளனர். இருவரையும் கொலை செய்ய ஒரு தரப்பினர் பணம் தந்ததாகவும், நீங்கள் பணம் தந்தால் உங்களை விட்டு விடுகிறோம் எனக் கூறி பணம் கேட்டு உள்ளதாகவும், ஜெனிதா பணம் இல்லை எனக் கூறி வளையல்களைக் கழற்றி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த கும்பல் அவரிடமிருந்து ஏடிஎம் கார்டையும் வாங்கி பின் நம்பரையும் குறித்துக் கொண்டுள்ளனர். அதேபோல், பேராசிரியர் ரமேஷை கீழே தள்ளித் தாக்கியதோடு, அவரது மொபைல் போனையும் ஏடிஎம் கார்டையும் பறித்துக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் ரமேஷ், மெயின் ரோட்டில் ரோந்து சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் அவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

உதவிப் பேராசிரியை ஜெனிதா கொடுத்த புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச்சென்ற 3 பேரும் ஜெனிதா ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.15 ஆயிரம் எடுத்துள்ளனர்.

இது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், "எங்களைக் கொலை செய்யும் நோக்கோடு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர்தான். அதில் ஒருவருக்கு 60 வயதும், மற்றவர்களுக்கு 47, 35 வயதும் இருக்கும். எங்களுக்கிடையே தகராறு நடந்த போது, நான் ஒரு கட்டையை எடுத்து அவர்களில் ஒருவனைத் தலையில் அடித்தேன். இதில் அவனுக்கு ரத்தம் வந்தது.

இதனை அடுத்து, என்னைக் கத்தியால் குத்த வந்தான். பிறகு மூவரும் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் பேசினர். திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் நடந்த முந்தைய மோசடி குறித்த வழக்கில் நான் சாட்சியாக உள்ளேன். எனவே என்னை மிரட்டுவதற்கு யாராவது கூலியாட்களை அனுப்பி இருக்கலாம்" என கூறினார்.

இதையும் படிங்க:"சிறைக்கைதியின் உயிருக்கு சிறைக் காவலர்களே பொறுப்பு" - மாநில மனித உரிமைகள் ஆணையம்!

Last Updated : Apr 27, 2024, 8:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details