திருநெல்வேலி:நெல்லைமாவட்டம் கண்டியப்பேரி பகுதியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மது விலக்கு தனிப்பிரிவு காவல் துறையினருக்கு நேற்று (டிசம்பர் 7) ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கண்டியப்பேரி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு ஒரு வீட்டில் வெளிமாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்ககபட்டறிந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில், சுமார் 1,108 குவாட்டர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த சாலமோன் தங்கராஜ் (32) என்பவரும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, செண்பகம் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது தெரிய வந்த நிலையில் அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சாலமோன் தங்கராஜை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் களக்காட்டைச் சேர்ந்த ஜான்சன் தங்கராஜ் (31), கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்த திமுக மாவட்ட கவுன்சிலரும், திட்டக்குழு உறுப்பினருமான மகேஷ் குமார் (31) மற்றும் சந்துரு, மணிகண்டன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.