திருநெல்வேலி:தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலின் காரணமாக வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சுக்கு சொந்தக் கட்சியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்போது தமிழ்நாடு சிறுபான்மையின நல வாரிய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தற்போதைய நெல்லை நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் அவரது மகன் அசோக் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு கேட்டனர். இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் இருக்கிறார்.
இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராபர்ட் புரூஸ் பிரச்சாரம் செல்லும் இடங்களில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒதுங்கியே நிற்கின்றனர் என்று கூறப்படுகிறது. திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட கூட்டணி கட்சிகள் தான் அதிக அளவில் பிரச்சாரத்தில் பங்கேற்பதாகவும், குறிப்பாக கூட்டணியின் தலைமை கட்சியான திமுக, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இதே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வாய்ப்பு கேட்டனர். குறிப்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட பல முன்னணி நிர்வாகிகள் திமுக தலைமையிடம் சீட் கேட்டு விண்ணப்பித்தனர்.
சீட்டு கேட்டவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதால் பிரச்சினை வேண்டாம் என கருதி, திமுக திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ்சுக்கு ஒதுக்கியது. எனவே திமுக நிர்வாகிகளும் பலர் திருநெல்வேலி வேட்பாளர் மீது அதிருப்தியில் இருப்பதால் சரிவர தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவர் தேர்தல் பணியை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி நிற்பதாகவும் கூறப்பட்டது. மேலும், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்றபோது மூன்று மணி நேரம் அவரை சபாநாயகர் காக்க வைத்ததாகவும் சரிவர அவரை நடத்தவில்லை எனவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.