கன்னியாகுமரி:உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வதால் எப்போதும் குமரி பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், முக்கடல் சங்கமிக்கும் கடலோரப் பகுதிகளான கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல், சாமிநாதபுரம், சர்ச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு சில விநாடிகள் மட்டுமே உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்த தகவல் பரவிய நிலையில், அப்பகுதிகளில் வருவாய்த் துறையினரும், கன்னியாகுமரி போலீசாரும் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட அதே நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம், கூட்டப்புளி உள்ளிட்ட குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.