திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ் முருகன். இவர் தமிழக நெடுஞ்சாலை துறையின் பிரபல ஒப்பந்ததாரர் ஆவார். இவரது நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையில் பணிகள் பல கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகள் இவரது நிறுவனத்தால் போடப்பட்ட சாலைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பிரபலமான ஒப்பந்ததாரர் இவர். குறிப்பாக அதிமுக, திமுக என தமிழகத்தில் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் கூட, இரண்டு ஆட்சிகளிலும் செல்வாக்கு பெற்று அரசின் ஒப்பந்தங்களை பெறுவதில் ஆர்.எஸ் முருகன் வல்லவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நெல்லை பெருமாள் புரம் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ் முருகன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (நவம்பர்.26) செவ்வாய்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையிலான வருமானவரித்துறை, டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் 4க்கும் மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஆர்.எஸ் முருகன் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதற்கு கட்டப்பட்ட டிடிஎஸ் (TTS) தொகை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். சோதனை நிறைவில் ஒப்பந்தங்களுக்கான டிடிஎஸ் கட்டப்பட்டதிற்கான பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி சென்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகராட்சிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள வணிக வளாகத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் தனது மகனுக்கு ஆர்.எஸ் முருகன் திருமணம் நடத்தி வைத்ததார். அந்த திருமணத்திற்காக செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகள் அடங்கிய திருமண வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது.