தூத்துக்குடி:திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை என 8 தினங்களுக்கு கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் எனவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வார்கள் எனவும், கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது நடைமுறையில் உள்ள கட்டணமில்லா முறை வரிசை மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசை ஆகியவற்றின் மூலமாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாத வகையிலும், கந்த சஷ்டி திருவிழா தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள், கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் 8 தினங்களுக்கு கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண சீட்டாக ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயம் செய்வதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.
இதையும் படிங்க:தூத்துக்குடி டூ திருச்செந்தூர் நான்கு வழிச்சாலை எப்போ? அமைச்சர் சொன்ன அப்டேட்!
மேற்படி கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்தது தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், இம்முடிவில் மாற்றம் இருப்பதாகவும், அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.