கோவை/நாமக்கல்: கேரளாவில் ஏடிஎம் மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, 60 லட்சத்துக்கும் மேலான பணத்துடன் கண்டெய்னரில் தப்பி தமிழகம் வந்த வட மாநிலத்தவர்களை, தமிழக போலீசார் நாமக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சில வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
விரட்டி பிடித்த போலீஸ்: தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், 30 வாகனங்களில் சென்று, அந்த கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று சேலம் மாவட்ட எல்லையில் சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த கண்டெய்னரில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், போலீசாரை துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது, பதில் தாக்குதலில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னரில் 60 லட்சத்துக்கும் மேலான பணம் மற்றும் கடத்தப்பட்ட கார் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட பணம் கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கேஸ் வெல்டரை பயன்படுத்தி கொள்ளை: இது குறித்து, திருச்சூர் காவல் ஆணையர் ஆர்.இளங்கோ, "திருச்சூர் கிழக்கு மற்றும் விய்யூர் பகுதியில் தலா ஒரு ஏடிஎம் மையத்திலும், இரிஞ்சாலக்குடா எனும் பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்திலும் அதிகாலை 2 இல் இருந்து 4 மணிக்குள் கொள்ளை நடந்துள்ளது. கொள்ளையர்கள் மேற்கண்ட ஏடிஎம் மையங்களில் இருந்த கேமராவை அணைத்துவிட்டு, கேஸ் வெல்டரை பயன்படுத்தி ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.