கரூர்:பிரபல ரவுடி ராமர் பாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இன்று (மே 19) குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த ராமர் பாண்டி (37), தமிழக தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவராக இருந்து வந்தார். இவர் தேவர் ஜெயந்தி விழாவுக்குச் சென்றவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், கடந்த மார்ச் 19ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய போது, அரவக்குறிச்சி அருகே பேரப்பாடி பிரிவு சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மதுரை மேலூரைச் சேர்ந்த தனுஷ் (21), ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்தவர்களான ரமேஷ் என்கிற குளுமை ரமேஷ் (26), தர்மா (25) ஆகிய மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீதும், பொது அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் (Trouble Mongers) மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவிக்கு பதில் மாமனாரைக் கொன்ற மருமகன் கைது.. தஞ்சையில் பரபரப்பு! - Son In Law Killed Father In Law