தூத்துக்குடி: உறைகிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே ஆனந்தநகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் கணேசன் (56). இவரது வீட்டில் 25 அடி கொண்ட உறைகிணறு வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்யும் பணியில் வீட்டு உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது உறவினரான ஆறுமுகநேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (36) ஆகிய 2 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
இதில்,சுத்தம் செய்வதற்காக முதலில் கணேசன் கிணற்றில் இறங்கியுள்ளார். ஆனால், கிணற்றுக்குள் சென்றவர், எந்த அசைவும் இல்லாமல் வெகு நேரமாகியும் மேலே வராததை தொடர்ந்து மாரிமுத்து கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் உறவினர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அங்கு நின்று கொண்டிருந்த பவித்ரன் மற்றும் ஜேசுராஜன் ஆகியோர் கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது, அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், தீயணைப்புத்துறை அலுவலர் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஆக்சிஜன் உதவியுடன் கடும் சிரமத்திற்கிடையில், கிணற்றில் இருந்த கணேசன், மாரிமுத்து, பவித்ரன், ஜேசுராஜன் ஆகியோரை மீட்டனர்.