கோயம்புத்தூர்:பொங்கல் பண்டிகையன்று வெளியூர் சென்ற மருத்துவர் வீட்டை நோட்டமிட்டு, 136 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டகாவலர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பல்லடம் சாலை ரத்தினம் நகரில் குடியிருப்பவர் கார்த்திக். இவர் கிணத்துக்கடவு பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்தினருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபர், கார்த்திக்கிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோக்களை உடைத்து சுமார் 136 பவுன் தங்க நகைகளையும், 3 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து மருத்துவர் கார்த்திக் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன் வழிகாட்டுதலின் பேரில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை 250க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வைரமணி, மணிசங்கர், கார்த்திக் என்பதும், இவர்கள் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூவரும் திருடியதை ஒப்புக் கொண்ட நிலையில், குற்றவாளிகளிடமிருந்து பொள்ளாச்சி பகுதியில் திருடப்பட்ட 136 தங்க நகை மட்டும் 3 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.