திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்கரன். இவரது மனைவி பொற்செல்வி என்பவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தவுடன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2020 ஜூலை 22ஆம் தேதி அதே மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் தையல் பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரல் 24ஆம் தேதி அவர், தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதைகள் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படுவது போல் பரிசோதனையில் தெரிய வருவதாக கூறியதையடுத்து, பொற்செல்வி தனக்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மருத்துவர் சிறிது காலம் கழித்து பரிசோதனைக்கு வருமாறு தெரிவித்ததால், மீண்டும் உடலில் உபாதை ஏற்பட்டதால், கடந்த 2021 ஜூலை 6ஆம் தேதி மருத்துவரைச் சந்தித்து ஸ்கேன் எடுத்த நிலையில், பொற்செல்வி கருவுற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில், மீண்டும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் 2021 ஜூலை 9ஆம் தேதி தொடர்பு கொண்டபோது, தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்து, அதன் அறிக்கையை 2021 ஜூலை 13 அன்று மருத்துவரிடம் காண்பிக்க அவர்கள் பரிசோதனை அறிக்கை அடிப்படையில், கருவுற்ற குழந்தையின் வளர்ச்சி ஆனது 11 வாரம் ஆறு நாட்கள் உள்ளதாகவும், 2023 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.