தஞ்சாவூர்:கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோவில் அருகே அன்னந்திருச்சேறை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (52). இவர், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரம், இவரது மனைவி விமலாவை பற்றி தவறாக சுவர்களில் எழுதப்பட்டிருந்த நிலையில், கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் மற்றும் கணேசன் ஆகிய இளைஞர்களை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் (மார்ச் 13) அன்னந்திருச்சேறை கிராமத்திற்கு வந்த கண்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனிடையே, தனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் மற்றும் கணேசன், ஆகியோர் தாக்கியதில் தான் தனது கணவர் உயிரிழந்தார் என விமலா நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கண்ணன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். விசாரணையில், நேற்று முன்தினம் (மார்ச்.13) இரவு கண்ணன் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் கிராமத்திற்கு வந்த போது ராமகிருஷ்ணன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கண்ணனின் வாகனத்தை மோதி அவரை தாக்கியுள்ளனர். இதனால், கண்ணன் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கண்ணனை தாக்கிய முத்துகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணன் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், விமலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி பயங்கர ஆயுதங்கள் வைத்துக்கொண்டு தாக்க முற்பட்டதாக கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஈஷாவில் 'தமிழ் தெம்பு' திருவிழா கோலாகலம்.. முதல்முறையாக ரேக்ளா பந்தயம்!