தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்கெட்ச் போட்டவர்களுக்கு ஸ்கெட்ச்.. தாம்பரம் அருகே வாலிபர் கொடூர கொலை.. பரபரப்பில் முடிச்சூர்! - mudichur murder - MUDICHUR MURDER

chennai crime: தாம்பரம் அடுத்த முடிச்சூரில் கஞ்சா பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதத்தால் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 1:04 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20).இவர் நேற்று முன்தினம் கஞ்சா வைத்திருந்ததால், அவரை அதே பகுதியைச் சேர்ந்த சூரியகாந்தி (31) என்பவர் தாக்கி விட்டு சந்தோஷின் செல் போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சந்தோஷ் இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்ததின் பேரில் அவரது தாய் சூரியகாந்தி வீட்டிற்கு சென்று செல்போனை மீட்டு தந்துள்ளார்.

இதனால் இரு தரப்பினர் இடையே முன் விரோதம் ஏற்பட்டு சந்தோஷ் அவரது நண்பர்களான விக்னேஷ் (19) மற்றும் சிலருடன் நேற்றிரவு சுமார் 11:30 மணி அளவில் முடிச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் சூரியகாந்தியை வெட்டி கொலை செய்வதற்காக கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்றுள்ளார்.

அப்போது சூரியகாந்தி அவரது சகோதரர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து கத்தியை பிடுங்கி அவர்களை திரும்ப வெட்ட முயற்சித்துள்ளனர். இதில் சந்தோஷ் தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், விக்னேஷ் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை கை, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்த சூரியகாந்தி தரப்பினர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விக்னஷின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், விக்னேஷை கொலை செய்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த சூரியகாந்தி (31), குமார் (24), அமோஸ் (34) ஆகியோரை பீர்க்கங்காரனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ராஜீவ் காந்தி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பைக் திருடியதாக வடமாநில இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்.. காவிரி கரையில் கிடந்த சடலம்.. கரூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details