கோயம்புத்தூர்:கோவை மேற்குத்தொடர்ச்சிமலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏழு மலைகள் ஏறி, சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவனைத் தரிசிக்க பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரைக்கும், பக்தர்கள் மலை ஏறுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
அதில் மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமிக்கு தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை வரும் நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலையேறி வருகின்றனர்.